சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் வரி: அமெரிக்க மசோதாவால் இந்தியர்கள் பீதி
சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால் வரி: அமெரிக்க மசோதாவால் இந்தியர்கள் பீதி
UPDATED : மே 18, 2025 08:26 PM
ADDED : மே 18, 2025 01:16 AM

வாஷிங்டன்: சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால், அதற்கு 5 சதவீதம் வரி விதிக்கும் வகையில், அமெரிக்க பார்லிமென்டில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியர்கள் உட்பட அங்கு பணியாற்றும் வெளிநாட்டவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி சார்பில், ஒரு மசோதா அந்த நாட்டின் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு பெரிய அழகான மசோதா என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, அமெரிக்காவில் இருந்து சொந்த நாடுகளுக்கு பணத்தை அனுப்பினால், அதற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும்.
இது, அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை பெரிய அளவில் பாதிக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் 23 லட்சம் இந்தியர்கள், பல விசாக்கள் வாயிலாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளனர்.
'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தரமாக தங்குவதற்கான அனுமதி பெற்றவர்கள், எச்1பி உள்ளிட்ட விசா வைத்துள்ள இந்தியர்கள், இனி சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பினால், 5 சதவீதம் வரியை செலுத்த வேண்டும். இதைத் தவிர, அமெரிக்காவில் வசிக்காத, அதே நேரத்தில் அங்கு செய்துள்ள முதலீடுகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினாலும், இந்த வரி விதிக்கப்படும்.
இந்த மசோதா, அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு கலக்கத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.