லண்டனில் இந்தியர்கள் போராட்டம்: பாக்., அதிகாரி அடாவடிக்கு கண்டனம்
லண்டனில் இந்தியர்கள் போராட்டம்: பாக்., அதிகாரி அடாவடிக்கு கண்டனம்
ADDED : ஏப் 27, 2025 12:24 AM

லண்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பாக்., துாதரக அதிகாரி, 'கழுத்தை அறுத்து விடுவேன்' என சைகை காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜம்மு - -காஷ்மீரின் பஹல்காமில், பாக்., பயங்கரவாதிகள் ஏப்., 22ல் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர்.
சமூக வலைதளம்
இந்தியா-பாக்., இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள பாக்., துாதரகம் முன், அங்குள்ள இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'சர்வதேச இந்திய நண்பர்கள் சங்கம்' என்ற அமைப்பு சார்பாக, லண்டன் லான்டேஸ் சதுக்கத்தில் உள்ள பாக்., துாதரகம் முன்பு ஏராளமானோர் திரண்டு, 'காஷ்மீரில் பயங்கரவாதத்தை நிறுத்து' என கோஷமிட்டனர்.
அப்போது, துாதரக கட்டடத்தின் பால்கனியில் இருந்தபடி, பாக்., துாதரக அதிகாரி ஒருவர், 2019ல் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாக்., படையால் சிறைபிடிக்கப்பட்ட படத்தை காண்பித்தார்.
அவர் அருகில் இருந்த மற்றொரு அதிகாரி, 'காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தான் துணை நிற்கும்' என்ற போஸ்டரை பிடித்தபடி, போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியர்களை பார்த்து, கழுத்தை அறுத்து விடுவதாக மிரட்டி சைகை காட்டினார். அவர் பாக்., துாதரகத்தின் ராணுவ ஆலோசகரான கர்னல் தைமூர் ரஹாத் என கூறப்படுகிறது.
இந்த வீடியோ காட்சிகளை, இந்தியர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
மேலும், 'பாக்., அதிகாரியின் செயல் கண்ணியமற்றது; காட்டுமிராண்டித்தனமானது. அடிப்படை துாதரக விதிமுறைகளை மீறிய செயல்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், சர்வதேச அளவில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு ஆதரவாக, பாக்., உடனான கொள்கைகளை பிரிட்டன் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, இந்தியர்கள் குறிப்பிட்டனர்.
பதற்றமான சூழல்
இந்தியர்கள் போராட்டத்தின்போது, லண்டனில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் சிலர், ஏராளமான ஒலிபெருக்கிகளை எடுத்து வந்து, மிக சத்தமாக பாடல்களை ஒலிக்கச் செய்து, இந்தியர்களின் கோஷம் கேட்க விடாமல் செய்தனர்.
போட்டி போராட்டத்திலும் ஈடுபட்டனர். மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டதால், லண்டன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால் ஒருவர் கைதானார்.