இந்தோனேஷியா விமானம் மலையில் மோதியது: 11 பேர் பலியான சோகம்
இந்தோனேஷியா விமானம் மலையில் மோதியது: 11 பேர் பலியான சோகம்
ADDED : ஜன 17, 2026 10:14 PM

ஜகார்த்தா: இந்தோனேஷியா மீன்வள அமைச்சகத்தின் ரோந்து விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த, 11 பேரும் உயிரிழந்தனர்.
தெற்காசிய நாடான இந்தோனேஷியாவின், கடலோர விவகாரம் மற்றும் மீன்வள அமைச்சகம் சார்பில் விமானம் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.ஏ.டி.ஆர்., - 42 - 500 என்ற ரோந்து விமானம் மஹாசார் விமான நிலையம் அருகே கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த விமானத்தில், எட்டு ஊழியர்கள் மற்றும் மூன்று பயணிகள் இருந்தனர்.
புறப்பட்ட சில மணி நேரத்தில், அந்த விமானம் கடல் பகுதியில் மிகவும் தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. இதனால், கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதற்கிடையே, அருகில் உள்ள புலு சாரங்க் என்ற மலையின் உச்சியில் மாயமான விமானத்தின் பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடுமையான பனி மூட்டத்தால் இந்க விமானம் மலையில் மோதி விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்தது இதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

