ADDED : நவ 01, 2024 09:08 PM

இஸ்லாமாபாத்: கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் பாகிஸ்தான், அரசு கட்டுப்பாட்டில் உள்ள விமான நிறுவனத்தை தனியார்மயமாக்க ஏலம் நடத்தியது. அதில், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. ஐ.எம்.எப்., உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமும், நட்பு நாடுகளிடமும் கடன் வாங்கி சமாளித்து வருகிறது. கடன் கொடுப்பதற்காக சர்வதேச அமைப்புகள் பல நிபந்தனைகளை விதித்துள்ளன. அதில் நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க வேண்டும் என்பன அடங்கும்.
அதன்படி, பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனை பராமரிக்க போதுமான நிதியில்லை. இதனையடுத்து இந்த விமானத்திற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.
இதனால், இந்த விமான நிறுவனத்தின் 51 முதல் 100 சதவீத பங்குகளை விற்க போவதாக அரசு அறிவித்தது. இதற்காக ஏலம் நடத்தி பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 85 பில்லியன் ரூபாய் திரட்ட அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்து இருந்தது.
இதற்கான ஏலம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்தது. அதில் 60 சதவீத பங்குகள் 10 பில்லியன் ரூபாய்(பாகிஸ்தான் மதிப்பில்) மட்டுமே ஏலம் கேட்கப்பட்டது. இந்த ஏலத்தில் பங்கேற்க 6 நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியிருந்த போதிலும், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று மட்டுமே பங்கேற்றது.அதிர்ச்சி அடைந்த அரசு அதிகாரிகள், ஏலத்திற்கான குறைந்தபட்ச தொகையையாவது அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.