UPDATED : ஆக 08, 2024 11:20 PM
ADDED : ஆக 08, 2024 11:14 PM

டாக்கா : நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், 84, தலைமையில் வங்கதேசத்தில் நேற்று இடைக்கால அரசு பொறுப் பேற்றது. ேஷக் ஹசீனா ஆட்சியில் இந்தியாவுடன் இருந்த நல்லுறவை யூனுஸ் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாகிஸ்தானுடன், 1971ல் நடந்த சுதந்திரப் போரில் வெற்றி பெற்ற பின், வங்கதேசம் தனி நாடானது. அந்த போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இதை, கடந்த ஜூனில் 30 சதவீதமாக உயர்த்தி டாக்கா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அதை கண்டுகொள்ளவில்லை. மாணவர்கள் சாலையில் இறங்கி போராடினர். 'அரசுக்கு எதிராக போராடுபவர்கள் தேசத் துரோகிகள்' என்றார் ஹசீனா. மாணவர்கள் கொந்தளித்தனர். போராட்டம் தீவிரம் ஆனது.
எதிர்க்கட்சியினரும் மாணவர்களுக்கு ஆதரவாக வீதிக்கு வந்தனர். வங்கதேசம் போர்க்களமானது. 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பிரதமரின் இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். ஊரடங்கை அமல்படுத்த ராணுவம்
சம்மதிக்கவில்லை. வேறு வழியின்றி, ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா தனி விமானத்தில் தப்பி இந்தியா வந்தார். இதை தொடர்ந்து, வங்கதேச பார்லிமென்டை கலைத்தார் அதிபர் முகமது ஷஹாபுதீன். இடைக்கால அரசு அமைக்க உத்தரவிட்டார். அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் இடைக்கால அரசு அமைக்க ஏற்பாடு செய்தது. அரசியல்வாதி அல்லாத அரசு வேண்டும் என மாணவர்கள் கோரினர். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்க சம்மதம் தெரிவித்தனர்.
பாரிசில் இருந்த யூனுஸ், நேற்று அதிகாலை 2:10 மணிக்கு டாக்கா வந்தடைந்தார். ராணுவ தலைமை தளபதி வகேர் உஜ் ஜமான், மூத்த அதிகாரிகள், மாணவர் அமைப்பு தலைவர்கள் வரவேற்றனர். அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், யூனுஸ் உணர்ச்சி பெருக்குடன் காணப்பட்டார்.
''இரண்டாவது சுதந்திரத்தை பெற்றுவிட்டோம். அதை பெற்றுத்தந்த இளைய தலைமுறையினருக்கு நன்றி. தேசம் உங்கள் கைகளுக்கு வந்துவிட்டது. அதை உங்கள் கனவுகளுக்கு ஏற்ப கற்பனை திறனுடன் கட்டியெழுப்புங்கள். நாம் அமைப்பது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசாக இருக்க வேண்டும்,'' என்றார்.
அங்கிருந்து, அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வங்கபவன் சென்றார். இரவு எட்டு மணிக்கு இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவி ஏற்றார். அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். யூனுஸ் உடன், 16 பேர் இடைக்கால அரசின் ஆலோசகர்களாக பதவி ஏற்றனர். வங்கதேச வங்கியின் முன்னாள் கவர்னர் சலே உதீன் அகமது, முன்னாள் தேர்தல் கமிஷனர் ஷகாவத் ஹுசைன், டாக்கா பல்கலை சட்ட பேராசிரியர் ஆசிப் நஸ்ருல், சமூக செயற்பாட்டாளர் அடிலுர் ரஹ்மான் கான், மாணவர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இருவர் அவர்களில் அடங்குவர்.