'பைஜுஸ்' நிறுவனருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை
'பைஜுஸ்' நிறுவனருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை
ADDED : ஜூன் 13, 2026 02:38 AM

சிங்கப்பூர்: 'பைஜுஸ்' கல்வி நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனைக்கு, சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது.
நம் நாட்டின் மிகப்பெரிய, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில் ஒன்றான, 'பைஜுஸ்' கல்வி நிறுவனம், நிதி நெருக்கடி மற்றும் சட்ட சிக்கல்களில் தவித்து வருகிறது. 10,000 கோடி ரூபாய் கடன் தொடர்பான சட்டப் போராட்டங்கள் அமெரிக்காவில் நடந்து வருகின்றன.
கத்தார் முதலீட்டு வாரியத்தின் துணை நிறுவனமான, 'கத்தார் ஹோல்டிங்ஸ்' தொடர்ந்த வழக்கில், பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சமீபத்தில் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.
மேலும், சொத்து விபரங்களை தாக்கல் செய்ய தாமதமானதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சிறை தண்டனையை எதிர்த்து பைஜு ரவீந்திரன் தரப்பில் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆறு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இதனால், அவருக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்து உள்ளது.
இதற்கிடையே, ரவீந்திரனுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என, அவர் சார்பில் ஆஜரான சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
