UPDATED : ஜூலை 10, 2026 08:38 PM
ADDED : ஜூலை 10, 2026 01:55 AM

டெஹ்ரான்: அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடியாக, குவைத், பஹ்ரைன், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் 'ட்ரோன்'களை ஏவி நேற்று தாக்குதல் நடத்தியது.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரான் -- அமெரிக்கா இடையே ஓய்ந்திருந்த போர் பதற்றம், மீண்டும் அதிகரித்து வருகிறது.
அறிவிப்பு
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற மூன்று சரக்கு கப்பல்கள் மீது, கடந்த 7ம் தேதி ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, அந்நாட்டின் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை தொடங்கியது.
கடல் போக்குவரத்து சுதந்திரத்தை பாது காக்கும் நடவடிக்கையாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், மேற்காசிய நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.
இதில், குவைத்தில் உள்ள 'கேம்ப் அரிப்ஜான், அலி அல் சலேம்' எனப்படும் அமெரிக்காவுடன் தொடர்புடைய விமான தளங்கள், பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தலைமையகம், 'ஷேக் இசா' விமான தளம் ஆகிய நான்கு அமெரிக்க ராணுவ தளங்கள் தாக்கப்பட்டதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தெரிவித்தது.
மேலும், குவைத்தில் 'பேட்ரியாட்' ஏவுகணை தடுப்பு அமைப்பு, பஹ்ரை னில் எரிபொருள் சேமிப்பு தொட்டிகள், கத்தாரில் முன் எச்சரிக்கை ராணுவ அமைப்புகள் ஆகியவை ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டதாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.
விட மாட்டோம்
இது குறித்து ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 'அமெரிக்க அதிபரின் நோக்கங்கள் எதையும் நிறைவேற விட மாட்டோம். இறுதி வெற்றி கிடைக்கும் வரை இஸ்லாமிய புரட்சியின் இலக்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையை தொடர்வோம்,' என தெரிவித்துள்ளது.
அமெரிக்கா கடந்த இரண்டு நாட்களாக ஈரானில் நடத்திய தாக்குதல்களில், 14 பேர் உயிரிழந்தனர்; 78 பேர் காயமடைந்தனர்.
ஈரானின் ஒரே அணு மின் நிலையமான புஷேர் அருகே நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. இதை அமெரிக்கா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
