குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மீண்டும் போர் பதற்றம்
குவைத் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மீண்டும் போர் பதற்றம்
ADDED : மே 28, 2026 05:04 PM

நமது நிருபர்
அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, குவைத் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்., 28ல் துவங்கிய போர், அமைதி ஒப்பந்த பேச்சுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள ஈரானின் துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்காப்பு தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக, குவைத் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ட்ரோன்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக குவைத் ராணுவம் தெரிவித்தது. எதை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது, தாக்குதலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஈரான் தனது அணுசக்தி கொள்கைகளை கைவிடுமாறு அமெரிக்கா கூறும் அதேவேளையில், தங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கி முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்குமாறு ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் தடைகளை நீக்க அமெரிக்கா முன்வரவில்லை. இதனால் மீண்டும் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
