ADDED : ஜூன் 20, 2025 01:09 AM

நியூயார்க்: ஈரான் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, 975 பேருக்கு கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றியிருப்பதாக ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானில் உலகிலேயே அதிகளவு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
இதுகுறித்து ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில், அதன் துணை கமிஷனர் நட அல்நாஸிப் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரானில் கடந்த 2024ல் மொத்தம் 975 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துாக்கிலிடுவதன் வாயிலாக அங்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தலுக்காக 507 பேர்; கொலை குற்றங்களுக்காக 419 பேர்; பாலியல் குற்றங்களுக்காக 20 பேர்; நாட்டின் பாதுகாப்பு தொடர்பான குற்றங்களுக்காக 29 பேர் துாக்கிலிடப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் பெண்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.