கடவுளின் எதிரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்; டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக 'பத்வா ' வெளியிட்ட ஈரான்
கடவுளின் எதிரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்; டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக 'பத்வா ' வெளியிட்ட ஈரான்
ADDED : ஜூலை 01, 2025 04:57 AM
டெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக, 'பத்வா' எனப்படும் மத ஆணையை பிறப்பித்துள்ள ஈரான் மூத்த மதகுரு, அவர்களை 'கடவுளின் எதிரிகள்' என குறிப்பிட்டுள்ளார்.
மேற்காசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடித்தது.
ஈரானின் அணு ஆயுத தளங்கள் மற்றும் ராணுவ மையங்களை இஸ்ரேல் கடந்த மாதம் 13ம் தேதி தாக்கியது. பதிலுக்கு, இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. அமெரிக்காவும் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களை அழித்தது. இதைத் தொடர்ந்து போர் ஒப்பந்தம் ஏற்பட்டு சண்டை நிறுத்தப்பட்டது.
போரின்போது ஈரானின் அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்லப்போவதாக இஸ்ரேல் மிரட்டல் விடுத்தது.
இதற்கு, ஈரானின் மூத்த மதகுருவான நாசர் மகாரெம் ஷிராஸி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக பத்வா எனப்படும் மத ஆணையை அவர் பிறப்பித்துள்ளார். பத்வா என்பது முஸ்லிம் சட்டமான ஷரியத் அடிப்படையில், வழங்கப்படும் தீர்ப்பாகும்.
ஷிராஸி வெளியிட்டுள்ள உத்தரவில், 'இவர்கள், 'மொஹரெப்' எனப்படும் கடவுளுக்கு எதிரானவர்கள். மொஹரெப் என்று அடையாளம் காணப்பட்டவர்களுக்கு, மரண தண்டனை வழங்க வேண்டும்.
இவர்களை வருந்தச் செய்யுங்கள். இதற்காக போராடுபவர்கள் கடவுளின் பாதையில் புனிதர்களாக கருதப்படுவர்.
'முஸ்லிம்கள் அல்லது முஸ்லிம் அரசுகளால், இந்த எதிரிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு ஒத்துழைப்பும் அல்லது ஆதரவும் தடை செய்யப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட்டு, இஸ்லாமிய குடியரசுத் தலைமையை அச்சுறுத்தியதற்காக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தலைவர்களை வீழ்த்த வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
ஈரானிய மதகுருமார்கள் தனிநபர் ஒருவருக்கு எதிராக பத்வா வெளியிடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 1989ல், 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலை வெளியிட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக இதேபோன்று பத்வா வெளியிடப்பட்டது.
ஈரானிய மதகுருமார்கள் தனிநபர் ஒருவருக்கு எதிராக பத்வா வெளியிடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 1989ல், 'தி சாத்தானிக் வெர்சஸ்' நாவலை வெளியிட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக இதேபோன்று பத்வா வெளியிடப்பட்டது.