மீண்டும் ஒரு அமைதி முன்மொழிவை அமெரிக்காவுக்கு அனுப்பியது ஈரான்
மீண்டும் ஒரு அமைதி முன்மொழிவை அமெரிக்காவுக்கு அனுப்பியது ஈரான்
ADDED : மே 04, 2026 01:11 AM

வாஷிங்டன்: ஈரானிடம் இருந்து வந்துள்ள புதிய அமைதி முன்மொழிவு குறித்து பரிசீலித்து வருவதாகவும், ஆனால், ஈரான் தவறாக நடந்து கொண்டால் மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்தப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தாக்குதல் நடத்த தொடங்கின.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமைதி பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் நடந்த முதல் கட்ட பேச்சு தோல்வியடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சை நடத்துவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே இழுபறி நிலவி வருகிறது.
தற்போது தற்காலிக போர் நிறுத்தம் நீடித்து வருகிறது. ஆனால், நிரந்தர தீர்வுக்காக இரு தரப்பும் மாறி மாறி நிபந்தனைகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில், அமைதி பேச்சுக்கான புதிய முன்மொழிவுகளை ஈரான், பாகிஸ்தான் வாயிலாக அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. அதில் 14 அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஈரான் எல்லைக்கு அருகில் உள்ள அமெரிக்க படைகளை வெளியேற்ற வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும், அமெரிக்க கடற்படையின் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மற்றும் ஈரான், லெபனான் மீதான போரை 30 நாட்களுக்குள் நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய அமைதி முன்மொழிவில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புதிய அமைதி முன்மொழிவு குறித்து அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாவது:
ஈரானிடம் இருந்து வந்துள்ள புதிய முன்மொழிவுகளை பரிசீலித்து வருகிறேன்.
ஆனால், ஈரான் தவறாக நடந்து கொண்டால் மீண்டும் ராணுவ தாக்குதல் நடத்தப்படும். அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில், கடந்த 47 ஆண்டுகளாக மனித குலத்திற்கும், உலகிற்கும் ஈரான் செய்த செயல்களுக்கு, அவர்கள் இன்னும் உரிய விலையை கொடுக்கவில்லை என்பதால், புதிய முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்வது குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
குறிப்பாக, ஈரானின் முன்மொழிவில் அணுசக்தி திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என கூறப்படுகிறது.
புதிய முன்மொழிவின்படி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே, அணுசக்தி திட்டம் குறித்து பேச்சு நடத்த ஈரான் முடிவு செய்துள்ளது. ஆனால், அணுசக்தி திட்டம் குறித்த உறுதியான ஒப்பந்தம் இல்லாமல் போரை முடிக்க அமெரிக்கா தயாராக இல்லை.
