அமெரிக்காவுடன் மிகப்பெரிய அளவில் போர்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
அமெரிக்காவுடன் மிகப்பெரிய அளவில் போர்; ஈரான் அதிபர் திட்டவட்டம்
ADDED : ஜூலை 20, 2026 09:32 PM

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் ஈரான் மிகப்பெரிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் மசூத் பெஷெஷ்கியன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் கூறியதாவது: அமெரிக்காவுடன் ஈரான் ஒரு மிக பெரிய அளவிலான போரில் ஈடுபட்டுள்ளது. இந்த மோதல் ராணுவத் தாக்குதல்களுக்கு அப்பாற்பட்டது . இன்றைய போர் என்பது வெறும் ஏவுகணைப் போர் அல்ல; ராணுவத் தாக்குதல்கள் மூலம் ஈரானை சரணடையச் செய்ய முடியாது என்ற முடிவுக்கு எதிரி நாட்டினர் வந்து விட்டனர்.
நாட்டின் எதிரிகளுடனான மோதலின் பிரதான களமாகப் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரங்களும் மாறியுள்ளது. எதிரிகள், பல்வேறு வழிகள் மூலம் நமது முன்னேற்றப் பாதைகளையும் இயக்கத்தையும் தடுக்கவும், ஈரான் அரசு கண்ணியம், அதிகாரம் மற்றும் பெருமையுடன் தனது பாதையில் தொடர்வதைத் தடுக்கவும் தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள்.
நாம் எதிரியின் சதித்திட்டங்களை எதிர்கொள்வதோடு, நமது உள்நாட்டுப் பிரச்னைகளையும் தீர்க்க வேண்டும். இந்தச் சிக்கல்களைச் சமாளிப்பது ஒரு எளிதான காரியம் அல்ல. எனவே, எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு ஒற்றுமை, புரிதல், பொதுவான தொலைநோக்கு பார்வை தேவை. நாட்டையும், தேச நலன்களையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு ஈரான் அதிபர் கூறியுள்ளார்.
