ADDED : செப் 30, 2025 08:31 AM

ஜெருசலேம்: ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில், அந்நாட்டின் யுரேனியம் இருப்பை முழுமையாக அழிக்கவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்துக்கு எதிராக அமைந்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. இதற்கிடையே, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான், அணுசக்தியை தயாரிக்கும் வகையில் யுரேனியம் தாதுவை செறிவூட்டும் முயற்சியில் ஈடுபட்டது.
இது, தங்கள் நாட்டுக்கு எதிரானது என, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது.
கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த தாக்குதலின்போது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியது. ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குண்டுகளை வீசின. இந்த தாக்குதலில், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று கூறியுள்ளதாவது:
ஈரானின் அணுசக்தி மையங்களில் அமெரிக்கா குண்டுகள் வீசி தகர்த்தது. இந்த தாக்குதல்கள் முக்கியமானவை என்றாலும், ஈரானின் முழு யுரேனியம் இருப்பையும் இத்தாக்குதல்களில் அழிக்கவில்லை.
செறிவூட்டப்பட்ட 400 கிலோ யுரேனியத்தை ஈரான் எங்கு மறைத்து வைத்துள்ளது என்பது எங்களுக்கு தெரியும். இத்தகவல் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், யுரேனியம் இருப்பை அழிப்பது நோக்கமல்ல. மாறாக, செறிவூட்டப்பட்ட அல்லது ஆயுதமாக்கும் திறனை தகர்ப்பதாகும். ஈரானின் அணு ஆயுத பெருக்கத்தை தடுக்க, பொருளாதார அழுத்தத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.