ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் சாத்தியமா? போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் தாக்குதல்கள்!
ஈரான் - அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் சாத்தியமா? போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் தாக்குதல்கள்!
UPDATED : மே 26, 2026 10:20 PM
ADDED : மே 26, 2026 07:24 PM

வாஷிங்டன்: ஈரானில் அமெரிக்கா நடத்திய தற்காப்பு தாக்குதல்கள் மற்றும் லெபனானில் ஹெஸ்பொல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்கைகள், மேற்காசிய போர் நிறுத்தத்துக்கான அமைதி பேச்சுக்கு தற்போது பெரும் சவல்களாக மாறியுள்ளன.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்., 28ல் துவங்கிய போர், அமைதி ஒப்பந்த பேச்சுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள தெற்கு ஈரானின் துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்காப்பு தாக்குதல்கள் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதை ஈரான் ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.
இத்தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளதாவது: உலகளாவிய எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து பகுதியான ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கு சொந்தமான இரண்டு படகுகள் கடற் கண்ணி வெடிகளை வைக்க முயன்றதால், அதை தடுக்கும் நோக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அப்படகுகள் அழிக்கப்பட்டன.
மேலும், தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்த, வானை நோக்கி பாயும் ஏவுகணை தளம், வானில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க போர் விமானங்களை குறி வைத்தது. இதையடுத்து, விமானங்களை பாதுகாக்கும் நோக்கில் அந்த ஏவுகணை தளத்தின் மீது தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டது.
இப்பகுதியில் உள்ள அமெரிக்க படைகளுக்கும், வீரர்களுக்கும் ஈரான் படைகளால் ஏற்படவிருந்த அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கவே இந்த தற்காப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் இருந்தபோதும், தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த பதற்றமான போர் சூழலுக்கு மத்தியில், மேற்காசிய நாடான கத்தார் தலைநகர் தோஹாவில் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் அமைதி ஒப்பந்த நடவடிக்கை குறித்து அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சு நடந்து வருகிறது. இதில் பங்கேற்க ஈரான் பார்லி., சபாநாயகர் பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் தோஹா சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்பேச்சில் கத்தார் மத்தியஸ்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஈரானின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, ஈரானின் முடக்கப்பட்டுள்ள வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான பூர்வாங்க உடன்பாட்டை அமெரிக்காவும், ஈரானும் எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
