இஸ்கான் அமைப்பை தடை செய்ய திட்டம் இல்லை; வங்கதேச அரசு திட்டவட்டம்!
இஸ்கான் அமைப்பை தடை செய்ய திட்டம் இல்லை; வங்கதேச அரசு திட்டவட்டம்!
ADDED : டிச 05, 2024 08:23 AM

டாக்கா: 'இஸ்கான் அமைப்பை தடை செய்ய திட்டம் இல்லை' என வங்கதேச இடைக்கால அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, 'சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் சின்மோய் தாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அவரது ஜாமின் மனு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இஸ்கான் அமைப்பு உறுப்பினர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதால், வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்காங்கே போராட்டம் நடந்து வருகிறது. இஸ்கான் அமைப்பை தடை செய்ய வங்கதேச இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து, வங்கதேச இடைக்கால அரசின் செய்தி தொடர்பாளர் ஷபிகுல் ஆலம் கூறியதாவது: இஸ்கான் அமைப்புடன் தொடர்புடைய துறவி ஒருவர் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்கான் அமைப்பை தடை செய்யும் திட்டம் அரசிடம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.