நடுத்தர வருவாய் நாட்டு மக்களுக்கு மாரடைப்பு அதிகம் வருவதற்கு இதுதான் காரணமா?
நடுத்தர வருவாய் நாட்டு மக்களுக்கு மாரடைப்பு அதிகம் வருவதற்கு இதுதான் காரணமா?
ADDED : ஆக 28, 2024 03:08 PM

லண்டன்: அதிக வருவாய் கொண்ட நாடுகளை விட நடுத்தர வருவாய் கொண்ட நாட்டு மக்களில் அதிகம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதற்கான காரணமும் வெளியாகி உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பேர் உயிரிழக்கின்றனர். முன்பு வயதானவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இளம் வயதினரும் பாதிக்கப்படுவது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கார்டியாலஜி ஐரோப்பிய அமைப்பு, ஐரோப்பா கண்டத்தை மையமாக வைத்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு: 55 நாடுகளில் ஆண்டுதோறும் 30 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் மாரடைப்பு தான் முக்கிய காரணியாக உள்ளது. 37.4 சதவீதம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர். 1990 முதல் 2021 ல் மாரடைப்பால் உயிரிழப்பவர்கள் விகிதம் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் 50 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், மத்திய வருவாய் நாடுகளில் 12 சதவீதம் மட்டுமே சரிவை சந்தித்து உள்ளது. இந்த நாடுகளில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களில் 46 சதவீதம் பேர் ஆண்கள். 53 சதவீதம் பேர் பெண்கள். ஆனால், அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஆண்கள் 30 சதவீதமாகவும், பெண்கள் 34 சதவீதமாகவும் உள்ளது.
காரணம் என்ன
மத்திய வருவாய் கொண்ட நாடுகளில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 25.4 சதவீதம் பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். அதிலும் 40.9 சதவீதம் பேர் ஆண்கள். இந்நாடுகளில், ஆண்கள் 40 சதவீதம் மற்றும் பெண்கள் 40 சதவீதம் பேர் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வளர்ந்த நாடுகளில் பெண்கள் 30 சதவீதம் பேர் ஆண்கள் 40 சதவீதம் பேர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
நீரிழிவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் மத்திய வருவாய் நாடுகளில் தான் அதிகமாக உள்ளது.
இங்கு, போதிய வசதிகள் கிடையாது. போதிய நிபுணர்கள் மற்றும் மாரடைப்பை முன்னரே கண்டுபிடிப்பதற்கான சிகிச்சை முறைகளும் குறைவாக உள்ளன. இதற்கு நேர்மாறாக அதிக வருமானம் கொண்ட நாடுகள் உள்ளன அங்கு பல இதயவியல் துறை நிபுணர்கள் பணியில் உள்ளதுடன், தரமான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
இந்தியாவில்
இந்தியாவில் உயிரிழப்பவர்களில் 24.8 சதவீதம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர். அதிலும் இளம் வயதினர் அதிகம் உள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மரபணு காரணமாக உள்ளதுடன், மாறி வரும் வாழ்க்கை முறையும் மற்றொரு காரணியாக உள்ளது.
உலகளவில்
உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி உலகம் முழுவதும் ஆண்டு தோறும் 1.79 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இதனால், 18 வயதுக்கு முன்னரே பரிசோதனை செய்து கொள்ளவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை தடுக்க உதவும் முறைகளை பின்பற்ற வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.