UPDATED : நவ 01, 2013 09:22 PM
ADDED : நவ 01, 2013 09:06 PM

லண்டன்: விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த,'டிவி' செய்தி வாசிப்பாளர், இசைப்பிரியா, அந்நாட்டு ராணுவத்தால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வீடியோ காட்சியை, லண்டனை சேர்ந்த, 'சேனல்4 நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில், பத்திரிகையாளராகவும், 'டிவி' செய்தி வாசிப்பாளராகவும், பாடகியாகவும் இருந்தவர், ஷோபா என்ற இசைபிரியா, 27. விடுதலை புலிகள் இயக்கத்தில், தகவல் தொடர்பு பிரிவில் இவர் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இறுதி கட்ட சண்டையின் போது, இசைபிரியா கொல்லப்பட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதற்கிடையே, லண்டனில் உள்ள, 'சேனல்4 நிறுவனம் இசைபிரியா கொல்லப்பட்ட வீடியோ காட்சியை சமீபத்தில் வெளியிட்டது. வயல்வெளி வழியாக தப்பி செல்லும் இசைபிரியாவை, ராணுவத்தினர் இழுத்து செல்வதும், 'நான் பிரபாகரனின் மகள் அல்ல' என, அவர் கெஞ்சுவதும், பிறகு அவர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், நிர்வாணமாக கொல்லப்பட்டு கிடப்பதுமாக, வீடியோ வெளியாகியுள்ளது. இசைபிரியா, போரின் போது இறந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை ராணுவத்தினர் இழுத்து சென்ற காட்சி, அவர் நிர்வாண நிலையில் இறந்த கிடக்கும் காட்சியும், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார், என்பதை உறுதி செய்துள்ளது. இலங்கையில், வரும், 15ம்தேதி, காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட வீடியோ, அந்நாட்டு அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.