இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா போர் நிறுத்தம்: வீடு திரும்பும் தெற்கு லெபனான் மக்கள்
இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா போர் நிறுத்தம்: வீடு திரும்பும் தெற்கு லெபனான் மக்கள்
UPDATED : நவ 28, 2024 02:08 PM
ADDED : நவ 28, 2024 02:24 AM

பெய்ரூட் : லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. கடந்த, 14 மாதங்களாக நடந்து வந்த போர் நிறுத்தப்பட்டதால், புலம் பெயர்ந்த மக்கள், எல்லை பகுதிக்கு திரும்பத் துவங்கினர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே, கடந்தாண்டு அக்டோபரில் போர் துவங்கியது. இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த போர் உருவானது.
ஆதரவு
இந்நிலையில், அண்டை நாடான லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பு, ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது. இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஆதரவு அளித்து வரும் ஈரானும், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
கடந்த 14 மாதங்களாக மும்முனை தாக்குதல்களை இஸ்ரேல் சந்தித்து வந்தது. ஒரு பக்கம் ஹமாஸ் அமைப்பை கட்டுப்படுத்திய நிலையில், கடந்த சில மாதங்களாக ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியது. அதன் முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர்.
இந்த மும்முனை போரால், மேற்காசியாவில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் முயற்சிகள் மேற்கொண்டன.
எச்சரிக்கை
இதன்படி, இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்புகள் போரை நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டன. இதற்கான உடன்பாடு ஏற்பட்டு, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதையடுத்து, லெபனானின் தென் பகுதியில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள், அங்கு திரும்புவதற்கு தயாராகினர்.
தங்களுடைய உடைமைகளுடன், கார்கள் மற்றும் வேன்களில் மக்கள் சாரை சாரையாக, பெய்ரூட்டில் இருந்து தென் பகுதிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் குவிந்தனர்.
'புலம் பெயர்ந்தவர்கள் உடனடியாக தென் பகுதிக்கு திரும்பக் கூடாது' என, இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது. 'தென் பகுதியில், இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து இருப்பதால், அங்கு திரும்ப வேண்டாம்' என, புலம் பெயர்ந்தவர்களுக்கு, லெபனான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால், இந்த எச்சரிக்கைகளை புறந்தள்ளி, மக்கள் சாரை சாரையாக திரும்பி வருகின்றனர். இதுபோல, இஸ்ரேலிலும், தென் பகுதிக்கு புலம் பெயர்ந்த எல்லையோர மக்கள், வடக்கு நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளனர்.
கடந்த 14 மாதங்களில், லெபனானின் தென் பகுதியில் இருந்து, 12 லட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர். அதுபோல, இஸ்ரேலின் வடக்கு பகுதியில், எல்லையை ஒட்டி வசித்து வந்த 50,000 பேர் இடம் பெயர்ந்தனர்.
இஸ்ரேல் தாக்குதல்களில், லெபனானில் 3,700 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் தரப்பில் 130 பேர் உயிரிழந்ததாக ஹெஸ்பொல்லா கூறுகிறது.