காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக மீது குற்றச்சாட்டு
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக மீது குற்றச்சாட்டு
ADDED : அக் 19, 2025 05:14 PM

காசா: காசாவில் ரபா என்ற இடத்தில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. ஹமாஸ் அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறியதால் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்த மோதல், அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும் காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கும், அங்குள்ள உள்ளூர் குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் 8 பேருக்கு நடுரோட்டில் வைத்து ஹமாஸ் அமைப்பினர் மரண தண்டனையை நிறைவேற்றினர். இதனையடுத்து காசா மக்களை கொல்வதை நிறுத்தாவிட்டால், ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என டிரம்ப் எச்சரித்து இருந்தார். இதனிடையே பாலஸ்தீன மக்கள் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறையினர் தெரிவித்து இருந்தனர்.
ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போடாதவரை காசாவில் போர் நிற்காது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில் காசாவின் ரபா என்ற இடத்தில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இந்தத் தாக்குதல் பல இடங்களில் நடந்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகமும் கூறியுள்ளது.
ரபாவில் அமைதி ஒப்பந்தத்தை மீறி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என இஸ்ரேல் கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.