இஸ்ரேல் எங்களை தோற்கடிக்க முடியாது; ஆயுதங்களை ஒப்படைக்கும் விவகாரத்தில் ஹிஸ்புல்லா பிடிவாதம்
இஸ்ரேல் எங்களை தோற்கடிக்க முடியாது; ஆயுதங்களை ஒப்படைக்கும் விவகாரத்தில் ஹிஸ்புல்லா பிடிவாதம்
UPDATED : ஜூலை 31, 2025 10:22 AM
ADDED : ஜூலை 31, 2025 07:28 AM

பெய்ரூட்: லெபனானின் அனைத்து அரசியல் பேச்சுக்களும், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, நாங்கள் ஆயுதங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதாக இருக்கக் கூடாது என்று ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் நயூம் காசிம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையிலான போரில் ஹமாஸூக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைய கோரி, லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால், இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் மறுத்து வருகின்றனர்.
இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பாக தலையிட்டு வரும் அமெரிக்கா, ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி முறையான அறிவிப்பை வெளியிடுமாறு லெபனானுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் படையால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா கமாண்டர் புவாட் ஷுக்ரியின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி, அந்த அமைப்புன் துணை தலைவர் நஷிம் காசிம் உரை நிகழ்த்தியுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது: ஆயுதங்களை ஒப்படைக்க சொல்பவர்கள், அதனை இஸ்ரேலிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். நாங்கள் இஸ்ரேலுக்கு அடிபணிய மாட்டோம். உள்நாட்டிலோ, அரபு நாடுகளிலோ அல்லது உலகளவிலோ ஆயுதங்களை கைவிடு என்று கூறுபவர்கள், இஸ்ரேலின் திட்டத்திற்கு சேவை செய்கிறார்கள். இஸ்ரேல் எங்களை தோற்கடிக்க முடியாது.
லெபனானை பணிய வைக்க முடியாது. லெபனானின் அனைத்து அரசியல் பேச்சுக்களும், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்துவதை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, நாங்கள் ஆயுதங்களை இஸ்ரேலிடம் ஒப்படைப்பதாக இருக்கக் கூடாது, இவ்வாறு அவர் கூறினார்.

