UPDATED : ஜூன் 13, 2025 10:40 PM
ADDED : ஜூன் 13, 2025 10:33 PM

டெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இன்று காலை தாக்குதல் நடத்திய நிலையில், இரவு மீண்டும் ட்ரோன் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஈரான் முழுவதும் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தெஹ்ரானின் தெற்கு பகுதியில் இஸ்ரேலின் ட்ரோன்களை ஈரான் அழித்துள்ளது. பார்டவ் அணுசக்தி நிலையம் அருகேயும் ட்ரோன் தாக்குதலை ஈரான் முறியடித்து உள்ளது.
இந்த முறை தெஹ்ரானின் அருகே உள்ள காராஜ் என்ற நகர் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிகிறது.
இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் ஏவுதளங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
டிரம்ப் பேட்டிஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரானிடம் இன்னும் அணுசக்தி திட்டங்கள் ஏதும் உள்ளதா என தெரியவில்லை. அணுஆயுத திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்த ஈரானுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் ஈரானை காப்பாற்ற முயன்றேன் என்றார்.
முதல் கடமை
முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அமெரிக்காவிடம் விளக்கப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவது குறித்து அமெரிக்காவின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். டிரம்ப் சுதந்திரமாக முடிவு எடுப்பார். தற்போதைய முதல் நோக்கம், ஈரானின் ஏவுகணை தயாரிப்பு கட்டமைப்பை அழிப்பது. ஈரான் பதிலுக்கு தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் இழப்புகளை குறைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்க படைகள்
இந்நிலையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் உட்பட ராணுவ நிலைகளை மத்திய கிழக்கை நோக்கி திருப்பி உள்ளது. மத்திய தரைகடலின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி தாமஸ் ஹண்டர் என்ற போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இக்கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கும்வல்லமை பெற்றது.