லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி
ADDED : செப் 21, 2024 01:34 AM

ஜெருசலேம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்.
மேற்காசிய நாடான லெபனானில், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது.
இவர்கள் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் தங்களுக்குள் ரகசிய தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்தி வந்த பேஜர் மற்றும் வாக்கி டாக்கி சாதனங்கள் சமீபத்தில் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.
இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள், பொதுமக்கள் என 37 பேர் உயிரிழந்தனர். 3,000 பேர் காயமடைந்தனர். இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக லெபனான் கூறுகிறது.
பேஜர்களை வெடிக்கச் செய்ததற்கு பதிலடி தருவோம் என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா அறிவித்திருந்தார்.
அதன்படி வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று, 140 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் பலவற்றை வானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதே சமயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அதிகம் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். 59 பேர் காயமடைந்தனர்.