இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ஏமனில் ஹவுதி தலைவர் கொலை
இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ஏமனில் ஹவுதி தலைவர் கொலை
ADDED : ஆக 30, 2025 04:27 AM
சனா: ஏமனில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹவுதி படையின் பிரதமர் என பிரகடனப்படுத்திக் கொண்ட தலைவர் கொல்லப்பட்டார்.
மேற்காசிய நாடான ஏமனில், அதன் அண்டை நாடான ஈரான் ஆதரவுடன், ஹவுதி படையினர் இயங்கி வருகின்றனர்.
இந்த படையினர், தலைநகர் சனா உட்பட பல பகுதி களை கட்டுப்பாட்டில் வைத்து, தனியாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, சனாவில் ஹவுதி படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில், இஸ்ரேல் படைகள் சரமாரியாக வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதில், ஹவுதி படையின் பிரதமர் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டார். மேலும், அவரது ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோரும் உயிர் இழந்தனர்; 90 பேர் காயமடைந்தனர்.
இது தவிர, ஹவுதி படையின் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதில், அப்படையின் ராணுவ அமைச்சர் முகமது அல்- அதிபி, ராணுவ தளபதி முகமது அப்துல்-கரீம் அல்-கமாரி உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.