இரு நாளில் 350 பேரை கொன்ற இஸ்ரேல் ராணுவம்: ஹமாஸ் குற்றச்சாட்டு
இரு நாளில் 350 பேரை கொன்ற இஸ்ரேல் ராணுவம்: ஹமாஸ் குற்றச்சாட்டு
ADDED : ஜன 29, 2024 11:46 AM

ஜெருசலேம்: காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப் போவதாக இஸ்ரேல் பிரதமர் சவால் விடுத்துள்ளார். காசா பகுதியை முற்றுகையிட்டு அங்கு வான்வழியாகவும், தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
காசாவின் கான் யூனிஸ் பகுதியில் கடந்த சில நாள்களாகவே இஸ்ரேல் ராணுவத்தினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
இது குறித்து ஹமாஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கை: இஸ்ரேல் படையினர் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 26,422ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டு வீச்சில் இதுவரை 65,087 பேர் காயமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறக்கையில் கூறப்பட்டுள்ளது.