ADDED : அக் 24, 2025 12:54 AM

ஜெருசலேம்: ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதிகளை இணைக்கும் மசோதாவை இஸ்ரேல் பார்லிமென்ட் முதற்கட்டமாக அங்கீகரித்துள்ளது.
இந்தியா போன்றே பாலஸ்தீனத்தையும் பல ஆண்டுகளாக பிரிட்டன் ஆட்சி செய்தது.
கடந்த, 194 7ல் பாலஸ்தீனத்தில் இருந்து பிரிட்டன் வெளி யேறிய பின், ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்களை உள்ளடக்கி இஸ்ரேல் என்ற தனிநாடு யூதர்களால் தோற்றுவிக்கப்பட்டது. காசா, மேற்கு கரை என இரண்டு முக்கிய நகரங்களை பாலஸ்தீனம் வைத்திருந்தது.
ஆனால், 1967ம் ஆண்டு அரபு நாடுகளின் கூட்டணிக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுத்து, பாலஸ்தீனத்தின் பெரும்பான்மையான பகுதிகளை தன்வசப்படுத்தியது. இது கிழக்கில் ஜோர்டான் நதியிலிருந்து மேற்கில் மத்திய தரைக் கடல் வரை நீண்டது. போரின் முடிவில், மேற்கு கரையின் பெரும்பான்மையான பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.
இதனால், பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்கும் தற்போது வரை மோதல் இருந்து கொண்டே இருக்கிறது.
அதன் ஒரு பகுதி யாகவே காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் -- ஹமாஸ் போர் இர ண்டு ஆண்டுகளைக் கடந்து தற்போது, அமெரிக்கா தலையீட்டால் தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது.
இந்த நிலையில், மீண்டும் பிரச்னையை துாண்டும் விதமாக மேற்குக் கரையை தங்கள் நாட்டுடன் இணைக்கும் மசோதா, இஸ்ரேல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
' யூதேயா மற்றும் சமாரியாவில் இஸ்ரேலிய இறையாண்மையைப் பயன்படுத்துதல்' என்று குறிப்பிடப்படும் இந்த மசோதா, மிகக் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இஸ்ரேல் பார்லிமென்ட் முதற்கட்டமாக இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய நிலையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் குழு விவாதத்திற் கு அனுப்பி வைக்கப்படும்.

