முடிவுக்கு வந்த இஸ்ரேல் - லெபனான் போர்; பிரதமர் நெதன்யாகு சொல்வது இதுதான்!
முடிவுக்கு வந்த இஸ்ரேல் - லெபனான் போர்; பிரதமர் நெதன்யாகு சொல்வது இதுதான்!
UPDATED : நவ 27, 2024 12:23 PM
ADDED : நவ 27, 2024 11:38 AM

ஜெருசலேம்: இஸ்ரேல் - லெபனான் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது. 'லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குவோம்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. சமீபத்தில் வாக்கி டாக்கி, பேஜர் உள்ளிட்டவற்றை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டனர். போரில் இதுவரை பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
தற்போது, இஸ்ரேல் - லெபனான் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்தது. இது குறித்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி: இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த ஒப்பந்தத்தின்படி நாளை முதல் போர் முடிவுக்கு வருகிறது. இரு நாடுகளுக்கு இடையான சண்டை நிரந்தரமாக நிறுத்தப்படும்.
போரை முடிவுக்கு கொண்டு வர லெபனான் மற்றும் இஸ்ரேல் தலைவர்கள் எடுத்த துணிச்சலான முடிவை நான் பாராட்டுகிறேன். இது அமைதிக்கு சாத்தியம் என்பதை காட்டுகிறது. இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையிலான எல்லையில் அமெரிக்கா ஆயுதக் குழுக்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுடன் சேர்ந்து தேவையான உதவிகளை வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவுக்கு வந்த போர் குறித்து, சமூகவலைதளத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் புரிதலோடு போரை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒப்பந்தத்தை மீறி, ஆயுதங்களை கையில் எடுத்தால் நாங்கள் தாக்குவோம். ராக்கெட் ஏவினாலும், சுரங்கம் தோண்டினாலும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தும். ராக்கெட்டுகளை சுமந்து லாரிகள் வந்தாலும் தாக்குதல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.