போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: இஸ்ரேல் ராணுவத்தினர் விடுவிப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் எதிரொலி: இஸ்ரேல் ராணுவத்தினர் விடுவிப்பு
ADDED : ஜன 25, 2025 11:26 PM

டெல் அவிவ்: போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக, பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் நாட்டின் நான்கு பெண் ராணுவ அதிகாரிகளை நேற்று ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர்.
ஒப்பந்தம்
அப்போது, 200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை அவர்கள் கடத்திச் சென்றனர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, 15 மாதங்களாக மோதல் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் போர் நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, கடந்த 19ம் தேதி முதல், 42 நாட்களுக்கு போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதற்கட்டமாக, மூன்று பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் சமீபத்தில் விடுவித்தது. பதிலுக்கு, இஸ்ரேல் தரப்பில் 90 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சூழலில், அடுத்தகட்டமாக ஹமாஸ் தரப்பிலிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டு, அது தொடர்பான பட்டியல் நேற்று காலை வெளியிடப்பட்டது.
ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா வெளியிட்டிருந்த அறிக்கையில், 2023ம் ஆண்டு தாக்குதலில் சிறை பிடிக்கப்பட்ட இஸ்ரேல் வீராங்கனையர் நான்கு பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
அதன்படி, லிரி அல்பாக், 19, கரினா அரிவ், 20, டேனியல் கில்போவா, 20, மற்றும் நாமா லெவி, 20, ஆகிய நால்வரும் நேற்று பிற்பகல் விடுவிக்கப்பட்டனர். காசாவில் உள்ள பாலஸ்தீன சதுக்கத்தின் முன், செஞ்சிலுவை சங்கத்தினரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
உற்சாக கொண்டாட்டம்
பின்னர், இஸ்ரேல் ராணுவத்தினரிடம் நால்வரும் ஒப்படைக்கப்பட்டனர். இதை, இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்தது. அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தியை, இஸ்ரேல் நாட்டினர் டெல் அவிவ் சதுக்கத்தின் முன் வைக்கப்பட்டிருந்த அகன்ற திரையின் வாயிலாக பார்த்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் வசமிருந்த பாலஸ்தீன பிணைக் கைதிகள் 70 பேர் நேற்று விடுவிக்கப்பட்டனர்.