'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க சொன்னதே அமெரிக்கா தான்'
'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க சொன்னதே அமெரிக்கா தான்'
ADDED : ஆக 22, 2025 12:38 AM

மாஸ்கோ:“ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, நாட்டின் நலனுக்காக மட்டும் எடுத்த நடவடிக்கை இல்லை. சர்வதேச எரிசக்தி சந்தையை நிலைப்படுத்த, ரஷ்யாவிடம் இருந்து வாங்கும்படி அமெரிக்கா கூறியது.
''ஆனால், தன் நிலைப் பாட்டை தற்போது மாற்றிக் கொண்டுள்ளது,” என, ரஷ்யாவில் நடந்த கூட்டத்தில் நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
சர்வதேச சவால்கள் ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவின் அழைப்பின்படி, அரசுமுறை பயணமாக, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆக., 19ல் ரஷ்யா சென்றார்.
நேற்று முன்தினம் அங்கு நடந்த இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆணையத்தின் 26-வது அமர்வில் பங்கேற்றார்.
அதில் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியாவும், ரஷ்யாவும் சிக்கலான சர்வதேச அரசியல் சவால்களை எதிர்கொள்ள புதுமையான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை உருவாக்க வேண்டும். சவால்கள் இருந்தாலும் இருதரப்பு உறவை விரிவுபடுத்த வேண்டும்,” என்றார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை நேற்று சந்தித்தார். அப்போது, “இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு, நம்பகமான சிறப்புக்குரிய நாடுகள் என்பதை நியாயப்படுத்தும் வகையில் உள்ளது,” என்றார் லாவ்ரோவ்.
இந்த சந்திப்புக்கு பின் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இதில், உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை புடின் சந்தித்தது, இருதரப்பு வர்த்தக, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
ரஷ்ய பயணத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
எரிசக்தி ஒத்துழைப்பு ரஷ்யாவுடனான எங்கள் உறவு இரண்டாம் உலக போருக்கு பின் மிகவும் சீராக வளர்ந்து வந்துள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடுகள் மூலம் ரஷ்யாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை கடைப்பிடிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியம்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் அதிகம் வாங்குவது நாங்கள் இல்லை; சீனா. அதே போல் இயற்கை எரிவாயுவை அதிகம் வாங்குவது ஐரோப்பிய யூனியன்.
உலக எரிசக்தி சந்தையை நிலைப்படுத்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். அதில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதும் அடங்கும் என்று, சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா கூறியது.
ஆனால், தற்போது தன் நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக் கொண்டுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

