ஆஸ்திரேலியாவில் 4வது துாதரகம் பிரிஸ்பேனில் திறந்தார் ஜெய்சங்கர்
ஆஸ்திரேலியாவில் 4வது துாதரகம் பிரிஸ்பேனில் திறந்தார் ஜெய்சங்கர்
ADDED : நவ 05, 2024 02:12 AM

பிரிஸ்பேன்
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், நான்காவது இந்திய துணை துாதரகத்தை நேற்று நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்.
நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்குள்ள பிரிஸ்பன் நகரில், இந்திய துணை துாதரகத்தை நேற்று திறந்து வைத்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், பெர்த் நகரங்களில் இந்திய துாதரகங்கள் உள்ளன. அந்த வரிசையில், நான்காவதாக பிரிஸ்பேன் நகரில் துாதரகம் நேற்று திறக்கப்பட்டது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'பிரிஸ்பனில் இந்திய துணை துாதரகம் திறந்ததில் மகிழ்ச்சி.
இது குயின்ஸ்லாந்து மாகாணத்துடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்த உதவும். வர்த்தகத்தை ஊக்குவிப்பதுடன், கல்வி தொடர்புகளை விரைவுபடுத்த உதவும்' என, குறிப்பிட்டு உள்ளார்.
பிரிஸ்பேனின் பார்க்லாண்ட் பகுதியில் உள்ள ரோமா தெருவில் வைக்கப்பட்டுள்ள மஹாத்மா காந்தி சிலைக்கு ஜெய்சங்கர் மரியாதை செய்தார். பின் குயின்ஸ்லாந்து கவர்னர் ஜெனெட் யங்கை சந்தித்து பேசினார்.
இந்த பயணத்தின் போது, கான்பராவில் நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் 15வது கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அப்போது, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை அவர் சந்தித்து பேசுவார்.
ஆஸ்திரேலிய பயணத்தை முடித்துக் கொண்டு, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் செல்லும் ஜெய்சங்கர், ஆசியான் இந்தியாவின் சிந்தனை குழுவின் 8வது வட்ட மேசை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.