ஜப்பானில் 40 ஆண்டுக்கு பின் அரியணை ஏறும் ஆண் வாரிசு
ஜப்பானில் 40 ஆண்டுக்கு பின் அரியணை ஏறும் ஆண் வாரிசு
ADDED : செப் 07, 2025 01:05 AM
டோக்கியோ:ஜப்பான் அரச வம்சத்தில் இளவரசர் ஹிசாஹிதோ, கடந்த 40 ஆண்டுகளில் வயதுக்கு வந்த முதல் ஆண் வாரிசு என்ற பெருமையை நேற்று அவரது 19வது பிறந்த நாளில் பெற்றார்.
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் முடியாட்சி முறை அமலில் உள்ளது. இங்கு அரசின் தலைவராக மன்னரே உள்ளார்.
அவருக்கு அரசியல் அதிகாரம் ஏதும் கிடையாது. அரசியலமைப்பின் படி அவர் ஒரு குறியீட்டு மற்றும் மரபான பாத்திரத்தை வகிக்கிறார்.
ஜப்பானின் அரசக் குடும்பத்தில், ஆண் வாரிசுகள் மூலம் மட்டுமே தலைமையேற்க முடியும் என்ற பாரம்பரிய விதியைக் கொண்டுள்ளது. தற்போது மன்னராக நருஹிதோ உள்ளார். இவருக்கு ஒரே மகள் இளவரசி ஐகோ; ஆண் வாரிசு கிடையாது.
அதனால் இவரது சகோதரர் அகிஷினோ பட்டத்து இளவரசரானார். இவருக்கு இளவரசி மாகோ, காகோ என இரண்டு மகள்கள் மற்றும் இளவரசர் ஹிசாஹிதோ எனும் ஒரு மகன் உள்ளனர்.
அகிஷினோவுக்கு பின் பட்டத்து இளவரசர் ஆகும் தகுதி இவர் ஒருவருக்கு மட்டுமே உள்ளது. ஜப்பான் அரச பாரம்பரியபடி, 18 வயதை பூர்த்தி செய்யும் ஆண் வாரிசுக்கே அரச பொறுப்புகள் வழங்கப்படும். இது ஒரு தனி விழாவாகவே நடைபெறும்.
அந்த வகையில் ஹிசாஹிதோ, நேற்று 19வது வயதை நிறைவு செய்தார். இது வயதுக்கு வந்த விழாவாக இம்பீரியல் அரண்மனையில் கொண்டாடப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளில் வயதுக்கு வந்த முதல் ஆண் வாரிசு என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அவருக்கு மகன் பிறந்தால் மட்டுமே அரச பாரம்பரியம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் அவருடன் அரச மரபு முடிவுக்கு வரும் ஆபத்து ஏற்பட்டுஉள்ளது.
இதன் காரணமாக 19வது நுாற்றாண்டு விதியான ஆண் வாரிசு மட்டுமே அரியணைக்கு வர முடியும் என்பதை நீக்க விவாதம் நடந்து வருகிறது.