ADDED : செப் 08, 2025 12:37 AM

டோக்கியோ: பார்லிமென்ட் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக சொந்தக் கட்சியினர் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகினார்.
கி ழக்காசிய நாடான ஜப்பானில், கடந்த ஆண்டு அக்டோபரில் எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் பார்ட்டி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஷிகெரு இஷிபா ஏற்றுக்கொண்டார். அதன் பின், 2024 அக்டோபரில் நடந்த பார்லிமென்டின் கீழ்சபை தேர்தல் மற்றும் இந்தாண்டு ஜூலையில் நடந்த மேல்சபை தேர்தல் இரண்டிலும் அக்கட்சி தன் பெரும்பான்மையை இ ழந்தது.
இத்தோல்விகளைத் தொடர்ந்து, எல்.டி.பி., கட் சிக்குள், இஷிபா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதைத்தொடர்ந்து, இன்று தலைமைப் பொறுப்புக்கான தேர்தல் முன்கூட்டியே நடத்த வேண்டுமா என்ற ஓட்டெடுப்பு கட்சிக்குள் நடைபெற இருந்தது. இது, இஷிபா மீதான நம்பிக்கையில்லா ஓட்டெடுப்பாகவே கருதப்பட்டது.
இந்நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்படுவதை தடுக்கும் விதமாக இஷிபா தன் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். இதையடுத்து, அந்நாட்டு வேளாண் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி மற்றும் முன்னாள் பிரதமரான யோஷிஹிடே சுகா ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்கு பின், ஷிகெரு இஷிபா தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இஷிபாவின் இம்முடிவால், எல்.டி.பி.,யின் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு வழிவகுத்துள்ளது. கீழ் சபையில் எல்.டி.பி., இன்னமும் அதிக இடங்களைக் கொண்டிருப்பதால், தலைவர் தேர்தலில் வெற்றி பெறுபவரே அடுத்த பிரதமராக பதவியேற்பார். பல முக்கிய தலைவர்கள் இப்பதவிக்கு போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்ற ஓராண்டுக்குள்ளாகவே, இஷிபா ராஜினாமா செய்தது, ஜப்பானில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.