மனமுருக மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்; பயிற்சி அளிக்கும் காரணம் இதுதான்!
மனமுருக மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்; பயிற்சி அளிக்கும் காரணம் இதுதான்!
ADDED : அக் 26, 2024 10:12 PM

வாஷிங்டன்: ''பழங்குடியின சிறுவர்களை குடும்பத்திடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து ' போர்டிங்' பள்ளிகளில் சேர்த்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,'' என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் பழங்குடியின சிறுவர்களை அந்நாட்டு அரசு, வலுக்கட்டாயமாக குடும்பங்களில் இருந்து பிரித்து 'போர்டிங்' பள்ளிகளில் ( வளாகத்திலேயே தங்கி படிக்கும் பள்ளிகள்) சேர்த்தது. அங்கு, அந்த சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டு வந்தனர். 150 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்ந்தது.
இது தொடர்பாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையில், 1819 முதல் 1969 வரை இந்த பள்ளிகளில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் படித்தனர். ஆனால், இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் ஆக இருக்கும். பள்ளிகளில் பல சிறுவர்கள், மனதளவிலும் உடல் அளவிலும் துன்புறுத்தப்பட்டதோடு, பாலியல் கொடுமைக்கும் ஆளானார்கள். 974 சிறுவர்கள் இறக்க நேரிட்டது. அவர்கள் 71 இடங்களில் அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த பள்ளிகளை நடத்த பார்லிமென்ட் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 23 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டது.
இத்தகைய பள்ளிகள் பெரும்பாலானவை, சிறுவர்களின் வீடுகளில் இருந்து வெகு தொலைவில் இருந்தது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதை நிறுத்த அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
இந்த பள்ளிகளில் படித்து தற்போது 60, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூறுகையில், இத்தகைய பள்ளிகளில் படித்தபோது நரக வேதனையை அனுபவித்தோம். சிறைபோன்று இருந்தது. அதன் பாதிப்புகளை தற்போதும் உணர்கிறோம். பெற்றோர், கலாசாரம், மொழி, குடும்பம், நம்பிக்கை ஆகியவற்றில் இருந்து எங்களை பிரித்து வைக்க அரசு இத்தகைய கொள்கைகளை வகுத்தது என வேதனை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது: போர்டிங் பள்ளிகள் அமெரிக்க வரலாற்றில் மோசமான சகாப்தங்களில் ஒன்று. 150 ஆண்டுக்கு பிறகு, இந்த திட்டத்தை அமெரிக்க அரசு நிறுத்தியது. ஆனால், நடந்தவற்றுக்கு எந்த அமெரிக்க அரசும் இன்று வரை மன்னிப்பு கேட்டது இல்லை. அமெரிக்க அதிபர் என்ற முறையில் நடந்த விஷயங்களுக்காக முறைப்படி நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நீண்ட கால தாமதத்திற்கு பிறகு மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு பைடன் கூறினார்.