பதவி முடியும் காலத்தில் பைடனுக்கு ஞானோதயம்; துப்பாக்கி கலாசாரம் ஒழிக்க திடீர் திட்டம்!
பதவி முடியும் காலத்தில் பைடனுக்கு ஞானோதயம்; துப்பாக்கி கலாசாரம் ஒழிக்க திடீர் திட்டம்!
ADDED : செப் 27, 2024 10:04 AM

வாஷிங்டன்: 'அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டம் கொண்டு வர உள்ளோம்' என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. கட்டுப்பாடுகள் பல இருந்தாலும், அவற்றை யாரும் பொருட்படுத்துவதே இல்லை. இதனால் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடக்காத நாளே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
குறிப்பாக பள்ளி குழந்தைகளை குறிவைத்து துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து வருவது மக்கள் கலக்கம் அடைய செய்துள்ளது. இந்தாண்டு மட்டும் 385 துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறி உள்ளன. துப்பாக்கி கலாசாரத்தை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்னும் 6 வாரங்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வர அதிபருக்கான நிறைவேற்று அதிகாரம் மூலம் புதிய சட்டத்தை கொண்டு வரப்போவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
நடவடிக்கை
மேலும் அவர், 'துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்கா துப்பாக்கி வன்முறையால் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, நோய் அல்லது விபத்துக்களில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை விட அதிகமாக உள்ளது. இது மிகவும் வேதனையானது' என்றார்.

