UPDATED : அக் 30, 2024 05:34 AM
ADDED : அக் 30, 2024 01:46 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய வம்சாவளியினருடன் இணைந்து, வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை நேற்று கொண்டாடினார்.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.,க்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் என 600க்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.
தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:
வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்துவதில் அமெரிக்க அதிபராக பெருமை அடைகிறேன். என்னுடன் பயணிக்கும் எம்.பி.,க்கள், துணை அதிபர் என முக்கிய நபர்கள் பலர் இந்திய வம்சாவளியினர்.
அமெரிக்காவில் தீபாவளி நாளில் நாம் ஒளியை பற்றி சிந்திக்கிறோம். சில தலைமுறைகளுக்கு முன் இங்கு தீபாவளி கொண்டாடுவதில் தயக்கம் இருந்தது. தற்போது வெள்ளை மாளிகையில் தீபாவளி வெளிப்படையாகவும், பெருமிதத்துடனும் கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அனுப்பிய தீபாவளி வாழ்த்து செய்தியும் ஒளிபரப்பப்பட்டது.