அதிபர் ரேஸில் முந்துகிறார் கமலா ஹாரிஸ்: டிரம்ப் அதிர்ச்சி
அதிபர் ரேஸில் முந்துகிறார் கமலா ஹாரிஸ்: டிரம்ப் அதிர்ச்சி
ADDED : ஆக 11, 2024 04:34 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக களமிறங்கி உள்ள கமலா ஹாரீஸ் முன்னிலையில் உள்ளார். இது குடியரசு கட்சி சார்பில் களமிறங்கி உள்ள டிரம்ப் தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் களமிறங்கினர். இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட விவாதத்தில் பைடன் பின்தங்கினார். பிறகு உடல்நலக்குறைவு காரணமாக ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரீஸ் களமிறங்கி உள்ளார். இதனையடுத்து அங்கு நிலைமை மாறி உள்ளது. இதுவரை கருத்துக்கணிப்புகளில் டிரம்ப் முன்னிலை பெற்ற நிலையில் தற்போது கமலா ஹாரீஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கக்கூடும் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் ஆக.,5 முதல் 9ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் கமலா ஹாரீசுக்கு 50 சதவீதம் பேரும், டிரம்ப்பிற்கு 46 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். பென்சில்வேனியாவில், எந்தக் கட்சியையும் சாராதவர்கள் அதிகம் பேர் கமலா ஹாரீசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
தனது துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸை, கமலா ஹாரீஸ் அறிவித்ததற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து உள்ளது. இந்நாள் வரை இந்த மாகாணங்களில் டிரம்ப்பிற்கு ஆதரவு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.