டிரம்ப் உடனான விவாதம்: கமலா காட்டிய முகபாவம்; அமெரிக்காவில் வைரல்
டிரம்ப் உடனான விவாதம்: கமலா காட்டிய முகபாவம்; அமெரிக்காவில் வைரல்
ADDED : செப் 12, 2024 01:40 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் உடனான விவாதத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் காட்டிய விதவிதமான முகபாவனை இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். இருவரும் முதன்முறையாக நேற்று (செப்.,11) பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய நேரடி விவாதத்தில் பங்கேற்றனர்.
விவாதத்தின் போது இருவரும் தங்களது கருத்துகள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அனல் பறந்த இந்த விவாதத்தில் டிரம்ப் பேசும்போது, கமலா ஹாரிஸ் வெளிப்படுத்திய ரியாக்ஷன் வைரலாகி வருகின்றன. கண்களை உருட்டுவதும், புருவத்தை உயர்த்துவதும், புன்னகையை வெளிப்படுத்துவதும், நக்கலாக பார்ப்பதும் என கமலா காட்டிய விதவிதமான முகபாவனைகள் அங்குள்ள பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்த முகபாவனைகளை எல்லாம் அவரது ஆதரவாளர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.