கமலா ஹாரிஸ் Vs டொனால்டு டிரம்ப்; விவாதத்தில் வெற்றி யாருக்கு: அந்நாட்டு ஊடகங்கள் சொல்வது இது தான்!
கமலா ஹாரிஸ் Vs டொனால்டு டிரம்ப்; விவாதத்தில் வெற்றி யாருக்கு: அந்நாட்டு ஊடகங்கள் சொல்வது இது தான்!
ADDED : செப் 12, 2024 09:05 AM

வாஷிங்டன்: கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே நடந்த அதிபர் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார்.
இருவரும் முதன்முறையாக நேற்று (செப்.,11) பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது இருவரும் தனது கருத்துகளை அள்ளி வீசினர்.
இந்நிலையில், இருவரில் யார் வெற்றியாளர் என அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:* முதல் அதிபர் விவாதத்தின் வெற்றியாளர் கமலா ஹாரிஸ். டொனால்டு டிரம்பிற்கு எதிரான துணை ஜனாதிபதியின் செயல்பாடு நன்றாக இருந்தது. டிரம்பை மீண்டும் மீண்டும் தூண்டிவிட்டு சமநிலையை இழக்கச் செய்தார் என பொலிட்டிகோ செய்தி நிறுவனம் (Politico) தெரிவித்துள்ளது.
* கமலா ஹாரிஸ் டொனால்ட் டிரம்பை விவாதத்தில் சரமாரியாக தாக்கி விட்டார் என சி.என்.என்., (CNN) தெரிவித்தது.
* டிரம்ப் பெரும்பாலும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பைடன் ஆட்சியில் நடந்த சதி மட்டும் பேசிவிட்டு விலகிவிட்டார் என வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
* கமலா ஹாரிஸ் தெளிவாக விவாதத்தில் செயல்பட்டார். அதேநேரத்தில் டிரம்ப் கோபமுடன் விவாதத்தில் இருந்தார் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
* துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனக்கும் முன்னாள் அதிபர் டிரம்புக்கும் இடையே நடந்த விவாதத்தில் வெற்றி பெற்றது தெளிவாக தெரிகிறது என்கிறது பாக்ஸ் நியூஸ் நிறுவனம்.
* கிட்டத்தட்ட இரண்டு மணிநேர விவாதம் தொடர்ந்ததால் டிரம்ப் மிகவும் விரக்தியடைந்தார். முன்னாள் அதிபர் கூறிய அனைத்தின் உண்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது ABC நியூஸ் நிறுவனம்.
* கமலா ஹாரிஸ்க்கு வெற்றி. அவர் விவாதம் முழுவதும் நிதானமாகவும், அதிபர் ஆக இருக்க வேண்டிய தகுதியுடனும் இருந்தார். விரக்தியடைந்து காணப்பட்ட டிரம்பை ஹாரிஸ் சரமாரியாக தாக்கினார் என MSNBC நிறுவனம் தெரிவித்தது.
* டொனால்டு டிரம்ப் கடைசி விவாதத்தில் ஜோ பைடனை வீழ்த்தினார். ஆனால் கமலா ஹாரிஸுக்கு எதிராக விவாதத்தில் பல முறை டிரம்ப் திணறிவிட்டார் என யு.எஸ்.ஏ., டுடே நிறுவனம் தெரிவித்துள்ளது.
* துணை அதிபர் கமலா ஹாரிஸ் விவாதத்தில் டொனால்டு டிரம்பை விரக்தி அடைய செய்தார். அவரது பிரசாரத்தில் மக்கள் ஆதரவு இல்லை என்று கூறியும், டிரம்ப்பின் குற்றச் செயல்கள் குறித்து பேசியும் அவரை கமலா திணறடித்து விட்டார். ஹாரிஸ் எழுச்சியுடன் செயல்பட்டார் The Wall Street Journal செய்தி நிறுவனம் தெரிவித்தது. பெரும்பாலான ஊடகங்கள் கமலா ஹாரிஸ் வெற்றியாளராக கருதுகிறது.
நேற்றைய விவாதத்தை உலகின் 17 தொலைக்காட்சிகளில் 6.7 கோடி பேர் பார்த்துள்ளனர். விவாதம் முடிந்த நிலையில், பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட், கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக அறிவித்து விட்டார். டிரம்ப் ஆதரவு செனட்டர் லின்ட்சே கிரஹாம், விவாதத்தில் டிரம்ப் மோசமாக செயல்பட்டார். கமலா வெற்றி பெற்றார் என்று ஒப்புக் கொண்டார்.

