கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
UPDATED : ஜூன் 03, 2025 07:09 PM
ADDED : ஜூன் 03, 2025 01:29 PM

கராச்சி: கராச்சியில் அதி உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு இருக்கிறது.
கராச்சியில் திடீரென நிலநடுக்கம் எற்பட்டதை அடுத்து அங்கு பல பகுதிகளில் குழப்பம் நிலவியது. அதன் நீட்சியாக கராச்சியில் உள்ள அதி உயர் பாதுகாப்பு கொண்ட மாலிர் சிறையிலும் குழப்பம் ஏற்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் அறைகளில் இருந்து பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர். ஏராளமானோர் ஒரே இடத்தில் கூடி இருக்க, அவர்களில் ஒரு குழுவினர் திடீரென சிறை வாயிலை திறந்து கொண்டு தப்பிக்க எத்தனித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. அங்கே வைக்கப்பட்டு இருந்த ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றிய கைதிகள் துப்பாக்கிச் சூட்டையும் நடத்தி உள்ளனர்.
இந்த மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட்ட, 3 சிறைத்துறை அதிகாரிகள், ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர். வன்முறையை தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைச்சாலை சுவரை உடைத்துக் கொண்டு தப்பி உள்ளனர்.
தப்பிய கைதிகளில் பலர் கராச்சி நகரின் வீதிகளில் உலாவ தொடங்கினர். இதை தொடர்ந்து, அவர்களை தேடும் பணியில் இறங்கிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 75 கைதிகளை சிறைபிடித்தனர். தப்பிய பலரில் பெரும்பான்மையானோர் கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை அனுபவித்து வருபவர்கள்.
நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து தணிக்கை செய்யப்பட்டு கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் கூறுகையில், நிலநடுக்கத்தால் சுவரில் விரிசல் ஏற்பட்டது. சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்றார்.