எப்.பி.ஐ., இயக்குனராக பகவத் கீதையை வைத்து பதவியேற்றார் காஷ் படேல்!
எப்.பி.ஐ., இயக்குனராக பகவத் கீதையை வைத்து பதவியேற்றார் காஷ் படேல்!
ADDED : பிப் 22, 2025 06:55 AM

வாஷிங்டன்: பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து, எப்.பி.ஐ., இயக்குனராக காஷ் படேல் பதவியேற்று கொண்டார். அவர், 'அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்களை எப்.பி.ஐ., வேட்டையாடும்' என உறுதி அளித்துள்ளார்.
அமெரிக்காவின் உள்நாட்டு உளவு பணி, ஊழல் போன்ற குற்றங்களை கையாளுவது எப்.பி.ஐ., வேலை. அதன் இயக்குநராக நியமிக்கப்படுபவர், 10 ஆண்டு காலம் பதவியில் இருப்பார். அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எப்.பிஐ., இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை நியமித்தார்.
காஷ் படேலின் பூர்வீகம் குஜராத். நியுயார்க்கில், 'குட்டி இந்தியா' என அழைக்கப்படும் குயின்ஸ் பகுதியில் காஷ் படேல் பிறந்தார். அவரது பெற்றோர். இப்போதும் குஜராத் வந்து செல்வது வழக்கம். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பகவத் கீதை மீது சத்திய பிரமாணம் செய்து, எப்.பி.ஐ., இயக்குனராக காஷ் படேல் பதவியேற்று கொண்டார்.
நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது: நான் காஷ் படேலை நேசிப்பதற்கும், அவரை பணியில் அமர்த்துவதற்கும் ஒரு காரணம் உள்ளது. அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை தான். அவர் வலிமையான மனிதர்.
போரை நிறுத்தவும், மில்லியன் கணக்கான மக்களைக் கொல்வதை நிறுத்தவும், ரஷ்ய அதிபர் புடினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒன்றிணைய வேண்டும். போர் நிறுத்தத்தை கொண்டு வர நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
'தன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பை வழங்கிய அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்துள்ள காஷ் படேல், அமெரிக்காவுக்கு தீங்கு நினைப்பவர்களை எப்.பி.ஐ., வேட்டையாடும்' என்று, தெரிவித்தார்.
நேர்மை, நீதி!
'காஷ் படேல் எப்.பி.ஐ.,யின் இயக்குநராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். எப்.பி.ஐ.,யில் நேர்மை மற்றும் நீதியை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது. அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக ஆக்க வேண்டும்' என பதவியேற்ற புகைப்படத்தை பகிர்ந்து வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.