அமெரிக்க குற்றச்சாட்டு எதிரொலி: அதானியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா
அமெரிக்க குற்றச்சாட்டு எதிரொலி: அதானியுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது கென்யா
UPDATED : நவ 21, 2024 08:39 PM
ADDED : நவ 21, 2024 08:20 PM

நைரோபி: அமெரிக்காவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை கென்யா ரத்து செய்துள்ளது.
கென்யாவில் விமான போக்குவரத்து துறையில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக அதானி நிறுவனத்துடன் கென்யா ஒப்பந்தம் போட்டு இருந்தது. மேலும் மின்சார விநியோகம் தொடர்பாகவும் அந்நிறுவனத்துடன் 736 பில்லியன் டாலர் அளவுக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சகம் ஒப்பந்தம் போட்டு இருந்தது.
இச்சூழ்நிலையில், 'சூரிய ஒளி மின்சார திட்டத்தை பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ.25 கோடி டாலர் லஞ்சமாக அதானி கொடுத்துள்ளார். அதில் அமெரிக்கர்களை முதலீடு செய்ய வைத்து மிகப்பெரிய மோசடியை நிகழ்த்தி உள்ளார்' என நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு தொடர்ந்துள்ளது. அவரை கைது செய்யவும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது இந்திய அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை அதானி மறுத்து உள்ளார்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கென்ய அரசு, அதானி உடனான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. லஞ்சம் கொடுக்கவில்லை என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் கென்ய அதிபர் வில்லியம் ரூடோ கூறியதாவது: விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அதானி நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளேன். மேலும், மின்சார விநியோகம் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.