sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 மீண்டும் கலீதா கட்சி?: மகன் தாரிக் ரஹ்மான் தலைமையில் மீண்டெழுந்தது: வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பி.என்.பி.,

/

 மீண்டும் கலீதா கட்சி?: மகன் தாரிக் ரஹ்மான் தலைமையில் மீண்டெழுந்தது: வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பி.என்.பி.,

 மீண்டும் கலீதா கட்சி?: மகன் தாரிக் ரஹ்மான் தலைமையில் மீண்டெழுந்தது: வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பி.என்.பி.,

 மீண்டும் கலீதா கட்சி?: மகன் தாரிக் ரஹ்மான் தலைமையில் மீண்டெழுந்தது: வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கிறது பி.என்.பி.,

5


UPDATED : பிப் 13, 2026 09:38 AM

ADDED : பிப் 13, 2026 12:42 AM

Google News

5

UPDATED : பிப் 13, 2026 09:38 AM ADDED : பிப் 13, 2026 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேசத்தில் நடந்த பொதுத் தேர்தலில், மறைந்த முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி., எனப்படும், வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல், இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்னையில், ஜூலையில் துவங்கி ஆகஸ்ட் வரை அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இது வன்முறையாக மாறி கட்டுக்கடங்காமல் போனதால், பிரதமராக இருந்த அவா மி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டுக்கு தப்பி வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு பதவியேற்றது.

நேரடி போட்டி



அவாமி லீக் நிர்வாகிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த இடைக்கால அரசு, தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது. புதிய அரசை தேர்வு செய்ய பிப்., 12ல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே வங்கதேச தேசியவாத கட்சித் தலைவரான முன்னாள் பிரதமர் கலீதா ஜியா, சமீபத்தில் உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். இந்த தேர்தலில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சிக்கும், ஜமாத்- - இ- - இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரஹ்மான் தலைமையிலான, 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

இக்கூட்டணியில், 2024ல் நடந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் அமைப்பின் தலைவர்கள் உருவாக்கிய தேசிய குடிமக்கள் கட்சியும் அங்கம் வகிக்கிறது. வங்கதேச பார்லி.,யின் மொத்த பலம் 350. இதில், 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்; இது கட்சிகளின் விகிதாசாரப்படி அளிக்கப்படும். இதன்படி, 300 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால், 299க்கு நேற்று தேர்தல் நடந்தது. இதற்காக, 42,779 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 7:30 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 4:30க்கு முடிந்தது. இதில், 13 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள். இதில், 7 கோடி ஆண் வாக்காளர்கள், 6 கோடி பெண் வாக்காளர்கள் அடங்குவர். காலை முதலே மந்தமான ஓட்டுப்பதிவே நிலவியது.

முன்னிலை



பிற்பகல் 2:00 மணி நிலவரப்படி, மொத்தம், 48 சதவீத ஓட்டுகள் பதிவாகின. பொதுத் தேர்தலுடன், 'ஜூலை சாசனம்' எனப்படும், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்த பொது ஓட்டெடுப்பும் நடந்தது. இதற்கு, 'ஆம்' அல்லது 'இல்லை' என, பதிலளிக்கும் வகையில் தனி ஓட்டுச்சீட்டு வழங்கப்பட்டது.

ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. குல்னா நகரில், வங்கதேச தேசியவாத கட்சி - ஜமாத் - -இ- - இஸ்லாமி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், வங்கதேச தேசியவாத கட்சி நிர்வாகி மொஹிபுசமான், 55, உயிரிழந்தார். தேர்தல் அமைதியாக நடப்பதை உறுதி செய்ய, 9 லட்சம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஐரோப்பிய யூனியன் மற்றும் காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த, 500-க்கும் மேற்பட்ட சர்வதேச பார்வையாளர்கள் தேர்தலை கண்காணித்தனர். மாலை 4:30 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததை அடுத்து, ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில், வங்கதேச தேசியவாத கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னணியில் உள்ளது.

இதன் மூலம் அக்கட்சி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது. இதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு பின், ஷேக் ஹசீனா, கலீதா ஜியா ஆகியோர் இல்லாமல் நடந்த முதல் பொதுத் தேர்தல் இது.

ரத்து செய்யுங்கள்!


வங்கதேச பொதுத் தேர்தல் அரசியலமைப்புக்கு விரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும். பொய் வழக்குகளால் சிறையில் உள்ள அரசியல் கைதிகள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், தொழில் வல்லுநர்களை விடுவிக்க வேண்டும். போலி தேர்தலை புறக்கணித்த பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கு நன்றி. அனைவரையும் உள்ளடக்கிய நியாயமான தேர்தல் நடப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- ஷேக் ஹசீனா, முன்னாள் பிரதமர், அவாமி லீக்



இரண்டு ஓட்டுகள்!


பொதுத் தேர்தலில், ஒவ்வொருவரும் இரண்டு ஓட்டுகளை செலுத்தினர். ஒன்று, பார்லி., - எம்.பி.,யை தேர்ந்தெடுப்பதற்கான ஓட்டு. மற்றொன்று, ' ஜூலை சாசனம் ' என்ற சீர்திருத்த நடவடிக்கையை ஏற்பது தொடர்பாக மக்களின் கருத்து கேட்கும் பொது ஓட்டெடுப்புக்கானது.
கடந்த, 2024 ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசால் முன்மொழியப்பட்டது ஜூலை சாசனம். அந்தாண்டு ஜூலை மாதம் நடந்த மாணவர் போராட்டத்தை குறிக்கும் வகையில் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில், அரசியல் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்காக, 80க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் பதவிக்கால வரம்புகள், பார்லிமென்டில் இரண்டு சபைகள் ஏற்படுத்துவது, நீதித் துறை சுதந்திரம், ஊழல் தடுப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும். மக்களின் கருத்துகளின் அடிப்படையில் இவற்றை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும் ஒரு ஹிந்து கொலை


வங்கதேசத்தில் பொதுத் தேர்தலுக்கு முந்தைய நாள், அதாவது நேற்று முன்தினம், மவுல்விபஜார் மாவட்டத்தின் கமல்கஞ்ச் பகுதியில், ரத்தன் ஷுவோ கர், 28, என்ற ஹிந்து தேயிலைத் தோட்டத் தொழிலாளி கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவரது கைகளும், கால்களும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், உடல் முழுதும் காயங்கள் இருந்தன. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.



இந்தியா தவிர்ப்பு!


நம் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வங்கதேச பொதுத் தேர்தலை கண்காணிக்க நம் நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக அந்நாட்டு அரசு அழைப்பு விடுத்திருந்தது. தேர்தல் செயல்முறையில் நம் நாடு தலையிடுவது போன்ற தோற்றம் ஏற்படுவதை தவிர்க்க தேர்தல் பார்வையாளர்களை அனுப்பவில்லை. தேர்தலின் நம்பகத்தன்மை என்பது வங்கதேச மக்களும், சர்வதேச சமூகமும் தீர்மானிக்க வேண்டிய விஷயம் என்பதில் நம் நாடு உறுதியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us