கனடாவில் ஹிந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல்
கனடாவில் ஹிந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் அமைப்பினர் தாக்குதல்
ADDED : நவ 05, 2024 09:41 AM

ஒட்டாவா: கனடாவில் ஹிந்து கோவில் முன் திரண்டிருந்த பக்தர்கள் மீது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, இந்தியா - கனடா உறவில் மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக கனடா அரசு குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. சமீபத்தில், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களை கொல்லும் சதி திட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்புபடுத்தி கனடா அமைச்சர் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கனடாவின் டொரன்டோ மாகாணத்திற்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில், ஹிந்து சபை கோவில் உள்ளது. இங்கு இந்திய துாதரகம் சார்பில், அங்குள்ள இந்தியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவில் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அங்கிருந்த பக்தர்கள் மீது அவர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். காலிஸ்தான் கொடி கம்பங்களை வைத்து, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் மீது அந்த கும்பல் நடத்திய தாக்குதலில், பலர் படுகாயம் அடைந்தனர்.
ஹிந்துக்கள் ஒவ்வொருவரையும் குறிவைத்து ஓட ஓட விரட்டி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. சம்பவ இடத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார், மோதலை தடுக்க முடியாமல் திணறினர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு, கனடாவில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துஉள்ளனர்.
நடவடிக்கை
'துாதரக பணிகளுக்காக உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி, முன்பே உயர்மட்ட கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், இத்தகைய வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. 'கனடாவில் இந்தியர்களின் பாதுகாப்பை நினைத்து கவலைப்படுகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் கனடா அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
கனடா எம்.பி.,க்களான சந்திர ஆர்யா, கெவின் வூங், அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் பெய்ரி பொய்லிவெரெ உள்ளிட்டோர் ஹிந்து கோவில் மற்றும் பக்தர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், இந்தியா - கனடா இடையே மோதல் நீடித்து வரும் சூழலில், ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், இரு நாட்டு உறவில் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: பிராம்ப்டனில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை ஏற்க முடியாது. ஒவ்வொரு கனடா குடிமகனும் சுதந்திரமான முறையில் கடவுளை வழிபட உரிமை இருக்கிறது. இந்த சம்பவத்தில் விரைவாக செயல்பட்டு, பாதுகாப்பை உறுதி செய்த போலீசாருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
தாக்குதலை ஏற்க முடியாது!
பிராம்ப்டனில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை ஏற்க முடியாது. ஒவ்வொரு கனடா குடிமகனும் சுதந்திரமான முறையில் கடவுளை வழிபட உரிமை இருக்கிறது. இந்த சம்பவத்தில் விரைவாக செயல்பட்டு, பாதுகாப்பை உறுதி செய்த போலீசாருக்கு நன்றி.
ஜஸ்டீன் ட்ரூடோ, கனடா பிரதமர்
மத்திய அரசு கண்டனம்
கனடாவில் ஹிந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும் நீதியை நிலைநிறுத்தவும் கனடா அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
கனடாவில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும், இத்தகைய தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கப்படுவதை அந்நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்' என, தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஹிந்து அமைப்பினர் சார்பில் இன்று அதே பிராம்ப்டன் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.