ADDED : பிப் 10, 2025 03:47 AM

பீஜிங்: சீனாவின் தென் மேற்கு பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்; மாயமான 28 பேரை மீட்கும்பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிங்பிங் கிராமத்தில், நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த பகுதிகளில் வசித்த 360 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
அப்பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்ததால், அதில் சிலர் சிக்கினர்.
தகவல் அறிந்து வந்த 1,000க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சடலம் மீட்கப்பட்டது. மாயமான மேலும் 28 பேரை தொடர்ந்து தேடும் பணி நடக்கிறது.
இடிந்த கட்டடங்களுக்குள் யாரும் உயிருடன் உள்ளனரா என்பதை ட்ரோன்கள் மற்றும் ரேடார்களை பயன்படுத்தி மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.

