கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் 11 பேர் பலி
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் 11 பேர் பலி
UPDATED : ஏப் 27, 2025 10:48 PM
ADDED : ஏப் 27, 2025 02:00 PM

வான்கூவர்: கனடா நாட்டின் வான்கூவர் நகரில், இசை விழா கூட்டத்தில் அதிவேக கார் புகுந்த சம்பவத்தில், 11 பேர் கொல்லப்பட்டனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஸ்பெயின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்த லாப்பு லாப்பு என்ற தளபதியின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, கனடா நாட்டின் வான்கூவர் நகரில் விழா நடந்தது. இதில், கனடாவில் வசிக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்றனர். இசை, நடனம், உணவு என கலாசாரத்திருவிழா களைகட்டியிருந்தது.
அப்போது கூட்டத்திற்குள் அதிவேகமாக வந்த கார் ஒன்று புகுந்தது. மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காரை டிரைவர் இயக்கி உள்ளார். கார் மோதிய வேகத்தில், விழாவில் பங்கேற்ற 11 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காரை ஓட்டி வந்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ் விளக்கம்
இது குறித்து வான்கூவர் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 41வது அவென்யூவில் நடந்த கலாசாரத்திருவிழாவில் கூட்டத்திற்குள் புகுந்த கார் மோதியதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
கார் டிரைவரை கைது செய்து விசாரிக்கிறோம். விசாரணை முடிந்த பிறகு முழு விபரத்தையும் வெளியிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.