'மிகப்பெரிய உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண்'; உலக வங்கி நிபுணர் கருத்து
'மிகப்பெரிய உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண்'; உலக வங்கி நிபுணர் கருத்து
ADDED : நவ 13, 2025 08:50 AM

புதுடில்லி: சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார பிரச்னைகளின் பாதிப்பை, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு சந்தை தான் குறைத்து விடுவதாக, உலக வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் ஆரேலியன் க்ரூஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், இந்திய பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வையே அதிகம் சார்ந்திருப்பதாகவும், ஏற்றுமதியை அதிகம் நம்பியில்லை என்ற பொருள்படும் வகையில் ஆரேலியன் க்ரூஸ் பேசியுள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் உள்நாட்டு சந்தை ஏற்கனவே மிகப் பெரியது. எனவே, சர்வதேச நிச்சயமற்ற தன்மையால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை இது குறைத்து விடுகிறது. உழைக்கும் வயதிலான மக்கள்தொகை போன்ற காரணிகள், வரும் தசாப்தங்களில் இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.வரும் 2050 வரை, உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும்.
இது விலை மதிப்பற்ற சொத்தாக விளங்குவதோடு, அதீத வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும். சர்வதேச அளவில், வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா தொடரும்.
இதை பன்னாட்டு நிதியமும், உலக வங்கியும் தொடர்ந்து கூறி வருகின்றன. அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.30 முதல் 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திறன் வாய்ந்த பொருளாதாரமாக விளங்குவதால், வளர்ச்சி 6 சதவீதத்துக்கு கீழ் குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.

