ராணுவ தளபதிக்காக சட்ட திருத்தம் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜினாமா
ராணுவ தளபதிக்காக சட்ட திருத்தம் உயர் நீதிமன்ற நீதிபதி ராஜினாமா
ADDED : நவ 15, 2025 11:05 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு, தெரிவித்து மூன்றாவதாக மற்றொரு நீதிபதியும் ராஜினாமா செய்துள்ளார்.
நம் அண்டை நாடான பாக்.,ல் ராணுவ தளபதி அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏதுவாக, 243வது சட்டப் பிரிவில் திருத்தம் செய்யும் வகையில், 27வது அரசியலமைப்புச் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவுக்கு அந்த நாட்டின் பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவில், உச்ச நீதிமன்றம் நாட்டின் உயர்ந்த நீதித்துறை அமைப்பு என்ற அந்தஸ்தை இழக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறி, ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் ராஜினாமா செய்தனர்.
இவர்களைத் தொடர்ந்து, லாகூர் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஷம்ஸ் மெஹமூத் மிர்ஸா, தன் ராஜினாமாவை சமர்ப்பித்தார்.
இவர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பி.டி.ஐ., கட்சியின் பொதுச் செயலர் சல்மான் அக்ரம் ராஜாவின் மைத்துனர் ஆவார்.
இதற்கிடையே, இந்த மசோதாவுக்கு, அந்த நாட்டின் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.

