ADDED : அக் 27, 2024 09:47 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் லியானார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்கிறது. குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இரண்டு அதிபர் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் கமலாவுக்கு ஆதரவு அதிகமாக இருந்தது. தற்போது கமலாவுக்கு ஆதரவு குறைந்து வருகிறது.
இந்நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் டைட்டானிக் பட நாயகன் லியானார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், லியானார்டோ டிகாப்ரியோ வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: பருவநிலை மாற்றம் கவலை அளிக்கிறது. தவறு செய்யாதீர்கள்: இந்த இயற்கைக்கு மாறான பேரழிவுகள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை.
நமது பொருளாதாரம், நமது கிரகம் மற்றும் நம்மைக் காப்பாற்ற ஒரு தைரியமான படி முன்னேற வேண்டும். அதனால்தான் கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க விரும்புகிறேன். நவம்பர் 5ம் தேதி கமலா ஹாரிசுக்கு ஓட்டளிக்க என்னுடன் சேருங்கள். 2050ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ய உமிழ்வை எட்டுவத்கான கமலாவின் லட்சிய இலக்குகளை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.