இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வோம்; இலங்கை அதிபர் ரணில் திட்டவட்டம்!
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வோம்; இலங்கை அதிபர் ரணில் திட்டவட்டம்!
UPDATED : செப் 20, 2024 01:39 PM
ADDED : செப் 20, 2024 09:55 AM

கொழும்பு: 'சீனாவுடன் உறவு இருந்தாலும், அதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எந்த குந்தகமும் இருக்காது என்பதை உறுதி செய்வோம்' என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்தார்.
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் நாளை(செப்.,21) நடைபெற இருக்கிறது. செப்., 22ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த சூழலில் இலங்கை அதிபர் பேட்டி எடுக்க ஊடகங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.
நெருக்கடியில் இரு நாடுகள்!
அவர் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: வங்கதேசத்தில் நிலவும் பிரச்னை மற்ற அனைத்து அண்டை நாடுகளிலும், இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இலங்கையும் வங்கதேசத்தில் கணிசமான முதலீடுகளைக் கொண்டுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறுகிய காலத்தில் தீர்க்கப்படாவிட்டால், அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும். மாலத்தீவு பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அவர்களுக்கு அனைத்து உதவிகளும் தேவை.
சீன உறவு
இலங்கைக்கு சீனாவுடன் நல்லுறவு உள்ளது. தொடர்ந்து நல்ல உறவு பேணுவோம். அதே வேளையில், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எந்த விதமான குந்தகமும் ஏற்படாது என்பதை உறுதி செய்வோம். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு என்பதன் அடிப்படையிலேயே எங்களது சீன உறவு அமைந்திருக்கும். சீனாவுடன் உறவுகள் இருந்தாலும், அது எங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் தான் இருக்கும்; அதுவும் இந்திய நலன்களுக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
20 மைல்கள்
இந்தியா வெறும் 20 மைல்களுக்கு அப்பால்தான் இருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சியினர், இந்தியாவுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால், இந்திய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும். இவ்வாறு இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.