லிபியா சர்வாதிகாரி கடாபியின் மகன் சுட்டு கொல்லப்பட்டார்
லிபியா சர்வாதிகாரி கடாபியின் மகன் சுட்டு கொல்லப்பட்டார்
ADDED : பிப் 05, 2026 04:33 AM

திரிபோலி: லிபியாவின் முன்னாள் அதிபரான சர்வாதிகாரி முயம்மர் கடாபியின் மகன், சயீப் அல் இஸ்லாம், 53, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
வட ஆப்ரிக்க நாடான லிபியாயை 42 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் முயம்மர் கடாபி. கடந்த 2011ல், லிபியாவில் கடாபியின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மிகப் பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது; அவர் போராட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
லிபியா தற்போது இரண்டாகப் பிரிந்து, மேற்கு லிபியாவில் ஐ.நா., அங்கீகரித்த பிரதமர் அப்துல் ஹமீத் முகமது துபைபா தலைமையிலான அரசும், கிழக்கு லிபியாவில் ராணுவத் தளபதி கலீபா ஹப்தார் கட்டுப்பாட்டில் உள்ள அரசும் அமைந்துள்ளன.
கடாபி அதிகாரத்தில் இருந்தபோது, அவரது இரண்டாவது மகன் சயீப் அல் இஸ்லாம், சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்டார்.
லிபியாவில் நடந்த உள்நாட்டு போரின்போது, சயீப் அல் இஸ்லாம், போராட்டக்காரர்களை ஒடுக்க, வன்முறையைக் கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனால், லிபியா நீதிமன்றம் 2015ல் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
இதையடுத்து பல ஆண்டுகள் சிறையில் இருந்த அவர், பின்னர் விடுவிக்கப்பட்டார். ஜின்டன் என்ற நகரில், சயீப் தலைமறைவாக வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றனர்.
உள்ளூர் நேரப்படி, நேற்று முன்தினம் அதிகாலை 2:30 மணியளவில், முகமூடி அணிந்த நான்கு பேர் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டின் 'சிசிடிவி' கேமராக்களை செயலிழக்கச் செய்தனர். பின்னர், சயீப் அல் இஸ்லாமை, தோட்டத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
இதனை சயீப் அல் இஸ்லாமின் வழக்கறிஞர் மார்செல் செக்காடி உறுதி செய்துள்ளார். இது ஒரு கோழைத்தனமான, அரசியல் பழிவாங்கும் செயல் என அவர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கொலை செய்தவர்கள் யார், காரணம் என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
