ADDED : டிச 25, 2025 01:32 AM

அங்காரா: துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தளபதி உட்பட, 7 பேர் உயிரிழந்தனர்.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் முக்கிய ராணுவ படைத்தளபதியான முகமது அலி அகமது அல் ஹதாத், மேற்காசிய நாடான துருக்கிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் உயர்மட்ட பாதுகாப்பு பேச்சுக்காக சென்ற அவர், நான்கு உயர் அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்களுடன், தனியார் ஜெட் விமானத்தில் நாடு திரும்பினார்.
தலைநகர் அங்காராவின் எசென்போகா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், 40 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து, ஹேமானா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானிகள், விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால், அந்த முயற்சி தோல்வியடைந்ததில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவத் தளபதி முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட விமானத்தில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

